கோவையில் கொடுமை; புதைக்கப்பட்ட வியாபாரியின் உடலை தோண்டி எடுத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை திருட்டு

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குழி தோண்டப்பட்டு இருந்தது.
கோவையில் கொடுமை; புதைக்கப்பட்ட வியாபாரியின் உடலை தோண்டி எடுத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை திருட்டு
Published on

கோவை

கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான நகையை 3 பேர் கொண்ட கும்பல் திருடி சென்ற கொடுமை நடந்துள்ளது.

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60). மீன் வியாபாரம் செய்து வந்த அவர், கடந்த 6-ந்தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நாகராஜ் தனது கழுத்தில் மீன் டாலர் பொறித்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை எப்போதும் அணிந்து இருப்பார். ஆசையுடன் அணிந்து இருந்த அந்த நகையுடன் அவரது உடலை அடக்கம் செய்ய மகன்கள், உறவினர்கள் முடிவு செய்தனர்.

உடல் அடக்கம்

அதன்படி அவரது உடல் சவுரிபாளையத்தில் உள்ள மாநகராட்சி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 16-வது நாள் காரியத்துக்காக அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய மகன் வெங்கடேஷ்குமார் மற்றும் உறவினர்கள் சென்றனர். அப்போது அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குழி தோண்டப்பட்டு இருந்தது.

இதுபற்றி அந்த சுடுகாட்டில் தண்ணீர் விடும் வேலையை செய்து வரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனிடம் (வயது 27) விசாரித்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 26), மணிகண்டன்(வயது 25) ஆகியோர் சம்பவத்தன்று இரவில் சுடுகாட்டுக்கு வந்து நாகராஜின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் குழி தோண்டி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை திருடிச்சென்றனர் என கூறினார். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும்.

நகை திருட்டு

இதுகுறித்த புகாரின்பேரில் சக்திவேல், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகராஜின் வீட்டின் அருகில்தான் சக்திவேலும், மணிகண்டனும் குடியிருந்து வருகின்றனர். அவரது உடலை அடக்கம் செய்யும்போதும், அவர்கள் உடன் இருந்தனர். அப்போது அவரது கழுத்தில் நகை இருந்ததை பார்த்தனர். சரிவர வேலைக்கு செல்லாமல் பணத்திற்கு திண்டாடிய இவர்கள், உடலின் கழுத்தில் இருந்த நகையை திருட முடிவு செய்து, மயானத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு பணியில் இருந்த கார்த்திகேயனிடம் பண ஆசை காட்டி தங்களது திட்டத்தை கூறியுள்ளனர். பின்னர் நாகராஜின் உடலின் தலைப்பகுதி இருந்த இடத்தில் குழிதோண்டி நகையை திருடியுள்ளனர். அந்த நகையை விற்று, கிடைத்த பணத்தை சக்திவேலும் மணிகண்டனும் பங்கு போட்டுக்கொண்டனர். கார்த்திகேயனுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளனர். கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com