

சென்னை,
விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஒரு பார்சல் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர். அப்போது, அந்த பார்சலில் அதிகளவு கிரிஸ்டல் மெத் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், அந்த போதைப்பொருள் சரக்கு விமானம் மூலம் மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், விமான நிலையத்தில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதை அறிந்த கடத்தல் கும்பல், பார்சலை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு, கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.