கடலூர் சிப்காட் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் - தொழிற்சாலை நிர்வாகம் அறிவிப்பு

கடலூர் சிப்காட் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடலூர் சிப்காட் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் - தொழிற்சாலை நிர்வாகம் அறிவிப்பு
Published on

கடலூர்,

பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலை ஒன்று சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு திடீரென பாய்லர் வெடித்ததில், பணியில் இருந்த தொழிலாளர்கள் தீ விபத்தில் சிக்கினர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சிக்கியிருந்த 17 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிகிச்சை பலனின்றி பெண் உள்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 13 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சாலையின் அலட்சியப் போக்கே விபத்துக்கு காரணம் என கூறி, அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர், நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

ரசாயன ஆலையில் இருந்து புகை வெளியேறி வரும் நிலையில், அங்கே வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என ட்ரோன் மூலம் தேடும் பணி நடைபெற்றது. தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடலூர் சிப்காட் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி தொழிற்சாலை தரப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 15 லட்ச ரூபாய் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், தொழிற்சாலை நிர்வாகத்தால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com