

கடலூர்,
கடலூரில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிருத்வி ராஜ். ரவுடியான இவர் நேற்று இரவு பெரிய காட்டுபாளையத்தில் நண்பர்களான சக ரவுடிகள் அருளரசு மற்றும் அவரது சகோதரன் அன்பரசன் உடன் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் பிருத்வி ராஜை அருளரசுவும், அவரது சகோதரன் அன்பரசனும் பீர் பாட்டிலால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று கொல்லப்பட்ட பிருத்வி ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரையும் தீவிரமாக தேடினர்.
அப்போது, ரெட்டிசாவையில் உள்ள முந்திரி காட்டிற்குள் இருவரும் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி அருளரசு தப்பியோட முயன்றார்.
இதையடுத்து தற்காப்புக்காக ரவுடி அருளரசுவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். போலீசார் சுட்டதில் காலில் காயமடைந்த அருளரசுவை கைது செய்த போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேபோல், மற்றொரு ரவுடியான அன்பரசனையும் போலீசார் கைது செய்தனர்.