கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்து: ரூ. 30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு


கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்து: ரூ. 30 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
x

இந்திரா, இளமதி

கடலூர் முதுநகர் அருகே தனியார் ரசாயன தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியாகினர்.

கடலூர்


கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே உள்ள கம்பளிமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி இளமதி (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் தேவர் மனைவி இந்திரா (32). கட்டிட தொழிலாளர்களான இவர்கள் இருவரும், கடலூர் குடிகாட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் கடந்த சில நாட்களாக கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றும் வேலைக்கு வந்த இருவரும் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் அந்த தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து இளமதி, இந்திரா ஆகியோர் மீது விழுந்தது. இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றினர். அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த இளமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திராவை, மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கடலூர் குடிகாட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் இளமதி, இந்திரா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் 2 பேருக்கு வேலை வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story