கடலூர்: மது போதையில் மாமனார், மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் - அதிர்ச்சி சம்பவம்

கனிமொழி நடத்தையில் காந்திக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கடலூர்: மது போதையில் மாமனார், மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் - அதிர்ச்சி சம்பவம்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்த கனிமொழி. இவருக்கும் வடபாதியை சேர்ந்த காந்தி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. காந்தி, கனிமொழி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இதனிடையே, மதுபோதைக்கு அடிமையான காந்தி அடிக்கடி குடித்துவிட்டு கனிமொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், கனிமொழி நடத்தையில் காந்திக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கனிமொழியிடம் காந்தி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கனிமொழி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கார்குடல் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் மனைவி இல்லாததை அறிந்த காந்தி மதுபோதையில் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். மாமனார் வீட்டிற்கு சென்ற காந்தி அங்கு வைத்து மாமனார் செல்வமணியிடம் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காந்தியை செல்வமணி சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த காந்தி தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் மாமனார் செல்வமணியை சரமாரியாக குத்தினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செல்வமணியின் மனைவி லதா தாக்குதல் நடத்திய மருமகன் காந்தியை தடுக்க முயன்றார்.

ஆனால் மதுபோதையில் இருந்த காந்தி தனது மாமியார் லதாவையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். பெற்றோரை தனது கணவன் கத்தியால் குத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்த கனிமொழி பக்கத்து வீட்டிற்குள் புகுந்து உயிர் தப்பினார்.

அதேவேளை, கத்திக்குத்து தாக்குதலில் செல்வமணி, லதா படுகாயமடைந்த நிலையில் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றனர். அப்போது வீட்டிற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மருமகன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வமணியின் மனைவி லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், மாமனாரை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய காந்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவி நடத்தையில் சந்தேகமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபோதையில் மாமனர், மாமியாரை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com