கடலூர் ரெயில் விபத்து; அன்புமணி ராமதாஸ் இரங்கல்


கடலூர் ரெயில் விபத்து; அன்புமணி ராமதாஸ் இரங்கல்
x

கோப்புப்படம்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி மூடுந்து மீது தொடர்வண்டி மோதியதில் பலர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என விழைகிறேன்.

விபத்துக்கான காரணம் குறித்து பல தகவல்கள் கூறப்படும் போதிலும் எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கடவுப்பாதை பணியாளர் உறங்கி விட்டதால் கதவை மூட மறந்தது தான் விபத்துக் காரணம் என்று ஒரு தரப்பிலும், கதவை மூட பணியாளர் முயன்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓட்டுனர் தடையை மீறி பேருந்தை ஓட்ட முயன்றது தான் விபத்துக்கு காரணம் என்று தொடர்வண்டித் துறை தரப்பிலும் கூறப்படுகிறது. உயிர்கள் பறிபோவதற்கு காரணமான விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஆளில்லா கடவுப்பாதைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைப் போல, கடவுப்பாதைகள் இருக்கும் இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்களை அமைக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக வல்லுனர் குழுவை அமைத்து ஆலோசனைகளை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story