கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 2 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு


கடலூர்:  பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 2 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 8 July 2025 8:10 AM IST (Updated: 8 July 2025 9:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்படுத்தியதில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

கடலூர்,

கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.

இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில், ஒரு மாணவர், ஒரு மாணவி என 2 பேர் பலியாகி உள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தின்போது, ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது.

இது விபத்திற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும்.

கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரெயில்கள் இந்த வழியே செல்கின்றன. இதனால், அந்த வழியே செல்லும் ரெயில் போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.

1 More update

Next Story