

தேனி,
தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நள்ளிரவில் குமுளி மலைச்சாலையில் அதிரடி சோதனை மேற்கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நள்ளிரவு நேரங்களில் கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனைத் தொடர்ந்து, கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, குமுளி போலீசாருடன் இணைந்து நேற்று (புதன்கிழமை) நள்ளிரவில் திடீர் வாகன சோதனையில் இறங்கினார்.
குமுளி மலைச்சாலை மற்றும் லோயர்கேம்ப் எல்லைப் பகுதி சோதனைச் சாவடிகள் வழியாக கேரளா நோக்கிச் சென்ற 5-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி, ரேஷன் அரிசி அல்லது கனிம வளங்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா என்று எம்.எல்.ஏ மற்றும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். எனினும் இந்த சோதனையில் லாரிகளில் கடத்தல் பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, "தமிழக-கேரள எல்லையில் கடத்தலைத் தடுக்க வருவாய்த் துறையினரும், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், எல்லைப் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வலியுறுத்தினார்.