

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஓட்டல்களை இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஊரடங்கு வருகிற 31-ந்தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும். சமூக, அரசியல், பொழுதுபோக்கு தொடர்பாக கூடுவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.
ஓட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சிகள்
மதுபான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்படலாம். பார்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம். கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவினை அரசு செயலாளர் விக்ராந்த் ராஜா வெளியிட்டுள்ளார்.
மதுக்கடைகள்
இதேபோல் கலால்துறை துணை ஆணையர் அலுவலக உத்தரவில், அனைத்து விதமான மதுக்கடைகளும் காலை 9 மணிமுதல் இயங்கலாம். பார்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும், சுற்றுலா உரிமம் பெற்ற பார்களில் இரவு 10 மணிவரை 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.