தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா தொற்று 2 மாதத்தில் படிப்படியாக குறைய தொடங்கியது.

இதனால் பல கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்-ரெயில் போக்குவரத்தும் இயக்கப்பட்டன. கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சகஜ நிலைக்கு மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியது. கடைகளிலும், மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகளவு இருப்பதை காண முடிகிறது.

இந்த நிலையில் கொரோனா 3-வது அலை அக்டோபர் மாதம் உச்சம் அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசு மிகுந்த கவனத்துடன் மக்கள் கூடும் பகுதிகளில் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள் என்ற விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறது.

ஆனாலும் சில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் குறிப்பிட்ட கடை வீதிகளை அதிகாரிகள் மூட உத்தரவிட்டனர்.

அந்தந்த மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகராட்சி கமிஷனர்கள் தேவையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அரசு அதிகாரம் வழங்கியது.

அதன்படி சென்னையில் தி.நகர் ரெங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பாரிமுனை பகுதி, புரசைவாக்கம் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதே போல் தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது. கோவையிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

இதனால் கடந்த முறை ஜூலை 31ந்தேதி முதல் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி ஆகஸ்டு 9ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இப்போது கொரோனாவை கட்டுப்படுத்த ஆங்காங்கே விழிப்புணர்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழலில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்களில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது.

இதனால் தமிழக எல்லையில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் 3வது அலை தமிழகத்தில் உருவாகி விடக்கூடாது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டு தற்போது அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வருகிற 9ந்தேதியுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்கு வர உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. ஆனால் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மருத்துவ நிபுணர்களும் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த 9ந்தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் தளர்த்தாமல் இப்போது உள்ளது போல் நீடிக்கலாமா? என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்கவும், கொரோனா விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன என்பது குறித்து இன்று மாலை அரசின் சார்பில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன்படி, ஆகஸ்டு 23ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com