

சென்னை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
“சுங்கச் சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.100 வரை சங்கக்கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக வந்திருக்கும் செய்தி எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகவே இருக்கின்றது. வளைகுடா போர் சூழலில் எண்ணெய் மற்றும் வரிவாயு விலை உயர்த்தப்பட்டிருப்பதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏற்றம் பெற்றிருக்கின்றது. விலைவாசி உயர்வு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் நுகர்வோர் பெருமளவு பாதிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு ஏற்கனவே எடுத்துச்சென்றுள்ளோம்.
இந்த தருணத்தில் சுங்கக்கட்டண உயர்வு என அறிவித்திருப்பது மேலும் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகப்படுத்தி, அது நுகர்வோர்களான பொதுமக்களின் மீதே சுமத்தப்படும் சுமையாகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில்கொண்டு, மாற்று வழிகளில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடுவதோடு, அறிவித்துள்ள சுங்கக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். உரிய தீர்வுகள் காணாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தனது நிலைப்பாட்டை எடுத்துச்செல்லும் நிலை உருவாகும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.