திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது
Published on

திருச்சி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

குறிப்பாக கடந்த 3 மாதங்களாக தினமும் பயணிகள் சிலரிடம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர். இதன் மூலம் பல கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25-ந்தேதி மலேசியாவில் இருந்து திருச்சி வந்த தனியார் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6.3 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சென்னையில் இருந்து வந்திருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அது தொடர்பாக விமான நிலையத்தில் சரக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர், பயணி ஒருவர், தங்கத்தை பெற்று கொள்ள வந்திருந்தவர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவம் திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று மாலை ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 70 பயணிகள் இருந்தனர். விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் அவர்களது பாஸ்போர்ட்டு, குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர். பயணிகளில் 20 பேர் சுங்க சோதனை முடிந்து வெளியே வந்தனர்.

அப்போது அங்கு திடீர் என வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 11 பேர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அப்படியே மீண்டும் விமான நிலையத்தின் உள்ளே அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.

கடத்தல் சம்பவங்களில் திருச்சி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பதற்காக அவர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர். பயணிகள், விமான நிலைய பணியாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட 60-க்கும் மேற்பட்டோரிடம் இன்று காலை தொடர் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் சுங்கதுறை அதிகாரிகள் 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். சுங்கத்துறை உதவி ஆணையர் மற்றும் 2 கண்காணிப்பாளர்களை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். தங்கம் கடத்தலில் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.

கடத்தல்கள் தொடர்பாக சுங்கத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com