மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவ தயாரான சி.வி. சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்

தவெக அமைச்சர்கள் 31 பேர், காங்கிரஸ் அமைச்சர்கள் 2 பேர் என இதுவரை 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர்.
மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவ தயாரான சி.வி. சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றது. இதனால் எதிர் கட்சி அந்தஸ்துகூட கிடைக்காமல் போனது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். அதன்படி, முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜய்பாஸ்கர் உள்ளிட்ட 25 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாடுகளை கையில் எடுத்து வருகின்றனர்.

அதன் எதிரொலியாகத்தான் மே 13-ம் தேதி சட்டசபையில் புதிய அரசின் பெரும்பான் மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு எதிராக 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர்.

கட்சி கொறடாவின் உத்தரவையும் மீறி வாக்களித்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு அளித்து உள்ளனர்.

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வினர் இடம் பெற்றால், குதிரை பேரம் நடந்தது உறுதியாகிவிடும் என்றும், கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும் உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது, அ.தி.மு.க. 2 ஆக உடைந்து நிற்கிறது. மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 பேரும், சி.வி.சண்முகம் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 பேரும் உள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க. அரசுக்கு 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததால், அதில் 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டச் சிக்கலை கருத்தில் கொண்டு, கடைசி நேரத்தில் அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுவது தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பதவியேற்றுக்கொண்ட 23 அமைச்சர்களில், காங்கிரஸ் கட்சியினர் 2 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க.வினர் மற்றும் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை.

அமைச்சரவையில் இடம் கிடைக்கும், தங்களுக்கு கிடைக்காவிட்டாலும் ஆட்சியில் இடம்பிடிக்கலாம் என்ற கனவுடன் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பை நம்பி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பிய எம்.எல்.ஏ-க்கள் தற்போது மிகப்பெரிய கவலையுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், இவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே சாய்ந்து விடலாமா? என்ற ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி தனது பக்கம் வரும் சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவை தானே ஏற்பதாக ஏற்கனவே அவர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளார். சிவி சண்முகம் தரப்பினருக்கு ஆதரவு அளித்தால் ஆட்சியில் இடம் கிடைத்தால் மட்டுமே தங்களுக்கு ஆதாயம் என்ற நிலையில் அவர்கள் உள்ளனர்.

அமைச்சரவையில் (சண்முக அணி) அதிமுக-விற்கு தவெக அரசு பை பை காட்டி இருப்பதால் விரைவில் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி பக்கம் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.,-க்கள் தாவுவார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் அதிமுக-வில் பல்வேறு முக்கிய சம்பவங்கள் அரங்கேறும் என்பது மட்டும் தவிர்க்க முடியாத உண்மையாகும்.

இதனிடையே தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கிய நிலையில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com