நடிகை குறித்த சி.வி.சண்முகத்தின் பேச்சு: செல்வப்பெருந்தகை கண்டனம்

சி.வி.சண்முகம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
நடிகை குறித்த சி.வி.சண்முகத்தின் பேச்சு: செல்வப்பெருந்தகை கண்டனம்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

‘தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் அவர்கள் குறித்தும் மற்றும் நடிகை நயன்தாரா குறித்தும் அவமதிப்பாக கருத்து தெரிவித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சி.வி.சண்முகம் அவர்களின் பேச்சை வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஒரு மக்கள் பிரதிநிதியாக பொறுப்பு வகிக்கும் நிலையில், பெண்களின் மரியாதையை புண்படுத்தும் வகையில் இத்தகைய தரக்குறைவான கருத்துகளை வெளியிடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசப்படும் ஒரு மேடையில் கூட இவ்வாறான அவமதிப்பு நிறைந்த பேச்சு இடம்பெறுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

இத்தகைய பேச்சுகள் பெண்களை பொருளாக்கும் மனப்போக்கை வெளிப்படுத்துவதோடு, சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்கும். ஏற்கனவே, நீதிமன்றம் அவருடைய அவதூறு மற்றும் அநாகரீக பேச்சை வன்மையாகக் கண்டித்தும், அவர் போக்கில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. அரசியல் தலைவர்கள் தங்களது பேச்சுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து, பொறுப்புடனும் நாகரிகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

எனவே, சி.வி.சண்முகம் தமது கருத்துக்கு பொதுமக்கள் முன்னிலையில் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

பெண்களின் மரியாதையும் பாதுகாப்பும் காக்கப்படும் சமூகத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com