‘சட்டரீதியாக எதிர்கொண்டு வெளிவருவேன்’ சி.பி.ஐ. சோதனை குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம்

எனக்கு மடியில் கனம் இல்லை, எனவே வழியில் பயம் இல்லை என்றும், சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளிவருவேன் என்றும் சி.பி.ஐ. சோதனை குறித்து அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
‘சட்டரீதியாக எதிர்கொண்டு வெளிவருவேன்’ சி.பி.ஐ. சோதனை குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம்
Published on

சென்னை,

சி.பி.ஐ. சோதனை நடந்தது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று இரவு விளக்க அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-

ஜெயலலிதா அரசு, குட்கா மற்றும் பான்மசாலா விற்பனையை 23.5.2013 அன்று தடை செய்து அதை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக பல சீரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மேலும், குட்கா மற்றும் பான்மசாலா தொடர்புடைய மாதவ்ராவ் என்ற நபரை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சந்திக்காத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி என்னை அரசியலில் இருந்து அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

மேற்படி பிரச்சினை குறித்து தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப்படையில் எந்த விசாரணைக்கும் என் ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளேன். இன்று நடந்த சோதனைக்கும் என் முழு ஒத்துழைப்பை அளித்துள்ளேன்.

காய்த்த மரம்தான் கல்லடிபடும் என்கிற ரீதியில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது குறிப்பாக, இரவும் பகலும் பாராமல் பொதுச்சேவை ஆற்றி தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையை இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகள் எழுப்புவது இயல்புதான்.

குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். இதுபோன்ற பிரச்சினைகள் எனது அரசியல் வாழ்வில் ஏற்படும் பொழுதெல்லாம், அவற்றையெல்லாம் கடந்து தொடர்ந்து வெற்றி பெற்று மக்கள் பணியில் தொய்வின்றி ஈடுபட்டு வருகிறேன்.

இப்பொழுதும் சொல்கிறேன், எனக்கு மடியில் கனமில்லை எனவே, வழியில் பயமில்லை. இந்த பிரச்சினையையும் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளிவருவேன் என்று பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com