வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதை உறவினர்களுக்கு அனுப்பி கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோயம்புத்தூர்,

கோவையை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த இளம்பெண்ணிடம், மாணவர் நன்றாக பேசி வந்தார். அவர்கள் நட்பாக பழகினர். இந்த நிலையில் அந்த மாணவர், இளம் பெண்ணுடன் வீடியோ காலில் நிர்வாணமாக பேசி உள்ளார். அதை அந்த இளம் பெண் மாணவருக்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்ததாக தெரிகிறது. வீடியோ கால் பேசி முடித்த சில நிமிடங்களில் அந்த மாணவரின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்கு அந்த வீடியோ வந்தது.

அதை பார்த்து மாணவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த வீடியோவில் மாணவர் மட்டும் நிர்வாணமாக இருப்பது பதிவாகி இருந்தது. உடனே அந்த மாணவர், இளம்பெண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் மறுமுனையில் வாலிபர் ஒருவர் பேசினார். அவர், நாங்கள் அனுப்பி வைத்த நிர்வாண வீடியோவை உனது பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்காமல் இருக்க எங்களுக்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டினார். இதனால் பயந்துபோன அந்த மாணவர் உடனடியாக தன்னிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை அந்த நபருக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் மீண்டும் அந்த நபர் மாணவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். அதற்கு மாணவர், தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். உடனே அந்த நபரும், இளம்பெண்ணும் பணம் அனுப்பவில்லை என்றால் உனது பெற்றோருக்கும், உறவினருக்கும் நிர்வாண வீடியோவை அனுப்பி வைத்துவிடுவதாக மிரட்டினர். இருந்தாலும், மாணவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் இளம்பெண்ணும், அந்த நபரும் மாணவரின் நிர்வாண வீடியோவை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாணவரிடம் அவரது உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த மாணவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த இளம்பெண் மற்றும் வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com