

சென்னை,
வங்கக்கடலில் இன்று (திங்கட்கிழமை) உருவாகும் அக்வான்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தப்பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வலுப்பெற்றது.
இது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில், போர்ட் பிளேருக்கு (அந்தமான் தீவு) மேற்கு-தென் மேற்கே சுமார் 700 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 860 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே 1,040 கி.மீ. தொலைவிலும் மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கு-தென்கிழக்கே 1,160 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, இன்று (திங்கட்கிழமை) தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக்கடலில் புயலாக மேலும் வலுவடையக்கூடும். நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கு-மத்திய வங்கக்க டலில் ‘தீவிர புயலாக' மாறக்கூடும். இந்த புயலுக்கு 'அக்வான்' என பெயரிடப்பட்டுள்ளது. இது அடுத்த 2 தினங்களில் மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும்.
இதேபோல தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து மாலத்தீவின் வடக்குப்பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வட கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தொடர்ந்து நாளை சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூ டும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின் னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட் டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஏனைய வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற் றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழ கத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் வருகிற 21-ந் தேதி வரை காற்று அதிவேகமாக வீசக்கூடும். நாளை மறுநாள் மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 100 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 145 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்கு மீன்பி டிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை படகுகளை கரையில் நிறுத்தி வைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சென்னை காசிமேடு உள்பட கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். வானிலை ஆய்வு மைய தகவல் அடிப்படையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வங்கக்கடலில் உருவாகும் 'அக்வான்' புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெற்று அடுத்த 2 தினங்களில் ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வருகிற 19-ந் தேதி ஆந்திராவில் புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலின் தன்மையை பொறுத்து எந்த பகுதி என்பது அமையும். இருப்பினும் 19-ந்தேதி தமிழகம் முழவதும் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.