

திருவளூர்,
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' அதிதீவிரப் புயலின் தாக்கத்தால், பழவேற்காடு - காட்டுப்பள்ளி கடற்கரை சேவை சாலை முழுவதும் கடல் மணலால் மூடப்பட்டு, சாலை இருந்த அடையாளமே தெரியாமல் காணாமல் போயுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'அர்னாப்' அதிதீவிரப் புயல், இன்று (புதன்கிழமை) அதிகாலை ஆந்திரா - ஏனாம் இடையே கரையைக் கடந்தது. இப்புயல் கரையைக் கடந்த சமயத்தில் ஏற்பட்ட கடுமையான கடல் சீற்றம் மற்றும் ராட்சத அலைகள் காரணமாக, தமிழகக் கடலோரப் பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து வடசென்னை காட்டுப்பள்ளிக்கு செல்லும் கடற்கரையில் அதிகாலை முதல் சீறிப் பாய்ந்த கடல் அலைகள், கரையைத் தாண்டி சாலைக்குள் புகுந்தன. இதனால், சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக சாலை முழுவதும் பல அடி உயரத்திற்கு ராட்சத மணல் திட்டுகள் குவிந்துள்ளன. தார்ச்சாலை இருந்த இடமே தெரியாத அளவுக்கு பகுதி முழுவதும் மணல் காடாக காட்சியளிக்கிறது.
சாலை முற்றிலும் மறைந்துவிட்டதால், அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய வாகனங்கள் மணலில் சிக்கி மேலே செல்ல முடியாமல் ஸ்தம்பித்துள்ளன. இதனால் காட்டுப்பள்ளி துறைமுகப் பகுதி மற்றும் கடலோரக் கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர், தற்காலிகமாகப் போக்குவரத்தை மாற்றியமைத்துள்ளனர். ராட்சத இயந்திரங்கள் (ஜேஜிபி) மூலம் சாலையில் குவிந்துள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. அர்னாப் புயல் தரைப்பகுதிக்குள் நகர்ந்தபோதிலும், கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றும் கடல் சீற்றமும் நீடிப்பதால், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரித்துள்ளது.