‘கஜா’ புயலால் மிகப்பெரிய சேதம்; ஆய்வு செய்ய மத்திய குழு வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது

கஜா புயலால் நேரிட்ட சேதத்தை ஆய்வு செய்ய மத்திய குழு வெள்ளிக்கிழமை தமிழகம் வரவுள்ளது.
‘கஜா’ புயலால் மிகப்பெரிய சேதம்; ஆய்வு செய்ய மத்திய குழு வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது
Published on

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கஜா புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.

கஜா புயல் பாதிப்பால் 45 லட்சம் தென்னை மரங்கள் சேதம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேயம் உள்ளவர்கள் பலரும் அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அரசு சார்பிலும், தனியார் நிறுவனம், அரசியல் கட்சிகள், திரை உலகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கஜா புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுவருவதற்கும் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும், முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சேதம் நேரிட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார்.

அதன்படி புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க மத்தியக் குழு வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறது. சென்னைவரும் குழு முதல்வரை சந்தித்த பின்னர் புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை பார்வையிட உள்ளது. அவர்களுடன் தமிழக அதிகாரிகளும் செல்கிறார்கள். சேதங்களை ஆய்வு செய்து மத்திய அரசிடம் குழு அறிக்கையை தாக்கல் செய்யும். குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்படவில்லை. மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com