'மிக்ஜம்' புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலாக மாறியதால் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மிகக் கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் ஏரிகள், நீர்நிலைப் பகுதிகள், தாழ்வு நிலைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள், வீடுகள் நீரில் மூழ்கின. கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அவரது அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் ராஜாராமன் அரசாணை பிறப்பித்திருந்தார்.

இதற்கான டோக்கன் வருகிற 16-ந் தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களுக்கும்; செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும்; காஞ்சீபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கும்;

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கும் நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 17-ந்தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகளில் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கும் பணியை சென்னையில் வரும் 17-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com