

சென்னை,
வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தொடர்பாக வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கீழ் வரும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
”முரசு புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர கடற்கரையை நோக்கி நகருகிறது. இருப்பினும் அடுத்த சில நாட்களுக்கு வட தமிழகத்தில் கனமழை, பலத்த சூறைக்காற்று மற்றும் மிகக் கொந்தளிப்பான கடல்நிலை நிலவும். இதனால் பதற்றம் அடைய தேவையில்லை. ஆனால் அனைவரும் விழிப்புடன் இருந்து எளிய நடைமுறை முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 4 மீட்டர் முதல் 6 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்து வரும்.
வடக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் 4-ந்தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். அனைத்து மீன்பிடி பணிகளும் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். உயர் அலைகளும், கடல் கொந்தளிப்பும் கடலோர சாலைகளில் நீர் தெறிக்க செய்யலாம். கடற்கரை நடைபாதைகளில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.