‘முரசு’ புயல், தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது

அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
‘முரசு’ புயல், தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது
Published on: 

ஓங்கோல்

ஆந்திர கடலோர பகுதியில் இன்று காலை ‘முரசு’ புயல், தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் தீவிர புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்த புயல் இன்று அதிகாலை 4 மணிக்குள் தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை மைய இயக்குநர் துரை கூறினார்.

சூறாவளி காற்று

புயல் கரையை கடக்கும்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரித்துள்ளார்.

எனினும், அர்னாப் புயல் கரையை கடந்தபோது ஏற்பட்ட பாதிப்புகளைப்போல முரசு புயலால் பாதிப்பு இருக்காது என்றும் கூறினார்.

விமான சேவை

முரசு புயல் பாதிப்புகள் மற்றும் மின் விநியோக சீரமைப்பு பணிகளுக்கு உதவ தமிழக அரசு சார்பில் ஆந்திராவுக்கு 500 மின்வாரிய பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை மற்றும் ஆந்திரா இடையே விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கனமழை

தெற்கு ஆந்திர கடற்பகுதியில் 'முரசு' புயல், அதிகாலை 1 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியது. அப்போது அது தீவிரப்புயலாக உருமாறியது. காலை 3.30 மணியளவில், முரசு புயலை முன்னிட்டு ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் நகரில் கனமழை பெய்தது. ஓங்கோல் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசியது. ஆந்திராவின் சிராலா பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடலோர பகுதிகளில், கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. தொடர்ந்து புயலின் கண்பகுதி, ஓங்கோல் நகர கடற்பகுதியை கடந்து வருகிறது. இதனால், ஓங்கோல் உள்ளிட்ட தெற்கு ஆந்திரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

புதுச்சேரியில் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழைப்பொழிவு காணப்படுகிறது. முரசு புயல் அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறி, ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் அருகே, நெல்லூர் மற்றும் நரசப்பூர் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எச்சரிக்கை

இந்த நிலையில், இன்று காலை 5 மணிக்கு முரசு புயலின் கண் பகுதி கடற்கரைக்குள் நுழைந்தது என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், 'முரசு' தீவிர சூறாவளி புயல், தற்போது மேற்கு-மத்திய வங்கக்கடலில், தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரைக்கு மிக அருகில், ஒங்கோலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 20 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. புயல் கரையை அடையும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் நெல்லூருக்கும், நரசபூருக்கும் இடையே ஒங்கோலுக்கு அருகில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100-110 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், தாழ்வான இடங்கள் நீரில் மூழ்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

X