முரசு புயல் தாக்கம்... சென்னையில் 4 விமானங்கள் ரத்து

இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
முரசு புயல்
Published on: 

மீனம்பாக்கம்,

'முரசு' புயல் தாக்கம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு இயக்கப்படும் விமானங்கள் 2-வது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானங்கள் ரத்து

முரசு புயல் காரணமாக, நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி, விஜயவாடா, கடப்பா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. ஆனால், ஆந்திர மாநிலம் விஜயவாடா, ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று காலை 7 மணிக்கு விஜயவாடா செல்ல வேண்டிய இண்டிகோ விமானமும், பிற்பகல் 2.35 மணிக்கு ராஜமுந்திரி செல்ல வேண்டிய இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், இன்று காலை 10.05 மணிக்கு விஜயவாடாவில் இருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ விமானமும், மாலை 6.20 மணிக்கு ராஜமுந்திரியில் இருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லவும், அங்கிருந்து சென்னை வரவும் திட்டமிட்டிருந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

X