எடப்பாடி பழனிசாமி சிறப்பு பஸ் மூலம் சூறாவளி சுற்றுப்பயணம்: பிரசார பாடல் இன்று வெளியீடு


எடப்பாடி பழனிசாமி சிறப்பு பஸ் மூலம் சூறாவளி சுற்றுப்பயணம்: பிரசார பாடல் இன்று வெளியீடு
x
தினத்தந்தி 4 July 2025 4:15 AM IST (Updated: 4 July 2025 4:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பஸ் மூலம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் கட்சியினர் வீட்டில் இரவு தங்குகிறார்். இந்த பயணத்திற்கான இலச்சினை மற்றும் பிரசார பாடல் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ஜனதா இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்றும், நமது கூட்டணி தான் மெகா கூட்டணியாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர், அடுத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். முதல்கட்டமாக வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது பிரசார பயணத்தை தொடங்கும் அவர் 23-ந்தேதி தஞ்சை பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின் மூலம் அவர் 33 சட்டசபை தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார்.

அவரது பிரசார பயணம் தொடர்பான இலச்சினை மற்றும் பாடல் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இன்று வெளியிடப்படுகிறது. மேலும் பொதுவாக கட்சி தலைவர்கள் தங்களது பயணத்தை வேன் அல்லது காரில் தான் மேற்கொள்வார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி, தனது பயணத்தை பஸ்சில் மேற்கொள்கிறார். அதற்காக பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்சில் தான் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதி வாரியாக செல்கிறார். அந்த பஸ்சில் இருந்தபடி பொதுமக்களையும் சந்திக்கிறார். அதாவது எளிதாக மக்களை கவரவேண்டும் என்பதற்காக பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் ரோடு ஷோ நடக்கிறது. அதில் மக்களோடு மக்களாக எடப்பாடி பழனிசாமி நடந்து செல்கிறார். அதேபோல் கட்சி நிர்வாகி வீட்டில் உணவருந்தும் வகையில் அவரது பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சில இடங்களில் கட்சியினர் வீட்டிலேயே இரவு தங்கவும் திட்டமிட்டுள்ளார்.

1 More update

Next Story