

சென்னை
தமிழக சட்டசபையில் ஓகி புயலால் மாயமான மீனவர்கள் பற்றிய தகவல்கள் ஆளுநர் உரையில் இல்லை. ஒகி புயல் நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் கோரிய முதற்கட்ட நிதியை, ஆளுநர் உரையில் குறைத்தது ஏன்? ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு கோரியிருந்த கோரிக்கையின் நிலை என்ன? என கேள்விகளை எழுப்பினார்.
சட்டசபையில் மீனவர்கள் விவகாரம் தொடர்பான மு.க. ஸ்டாலின் கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அதன் முக்கிய விவரம் வருமாறு:-
* ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினேன்.
* ஒகி புயல், வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து பிரதமரிடம் விரிவான மனு அளிக்கப்பட்டு உள்ளது.
* தேசிய பேரிடர் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
* 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். திசை மாறி பிற மாநிலங்களுக்கு சென்ற மீனவர்களை, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் டீசல், உணவுப்படி வழங்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
* 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீட்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
* ஒகி புயலுக்கு முன்னதாகவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
* வானிலை மைய அறிவுறுத்தலின் படி டிச.29-ம் தேதியே அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவிக்கப்பட்டது
* தொலைத்தொடர்பு வசதி இல்லாததால் ஆழ்கடலுக்குச் சென்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியவில்லை.
* 100 கடல் மைல் தூரத்துக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பினார்கள்; அதற்கும் மேல் சென்றவர்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் சென்று சேரவில்லை.
* உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது.
* மீனவர்களுக்கு கம்பியில்லா வயர்லெஸ் கருவி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
* வானிலை விவரங்களை மீனவர்களுக்கு தமிழில் தெரிவிக்க பிரத்யேக செயற்கைக்கோள் அனுப்ப பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.
* ஒகி புயலால் மாயமான 3,522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.
#TNAssembly | #CycloneOckhi | #Opposition | #EdappadiPalanisamy | #MKStalin