பொதட்டூர்பேட்டை அருகே சிலிண்டர் வெடித்து வீடு சேதம் - அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்

பொதட்டூர்பேட்டை அருகே சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு சேதமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த தம்பதி உயிர் தப்பினர்.
பொதட்டூர்பேட்டை அருகே சிலிண்டர் வெடித்து வீடு சேதம் - அதிர்ஷ்டவசமாக தம்பதி உயிர் தப்பினர்
Published on

பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே சவுட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாதன் (வயது 73). இவரது மனைவி லலிதா (65). நாதன் நெசவு தொழிலாளி. நேற்று காலை லலிதா வீட்டில் டீ போடுவதற்காக சமையல் கேஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென்று சிலிண்டரில் தீப்பிடித்தது. இதனால் பதறிப் போன லலிதா வீட்டில் இருந்து அலறியபடி வெளியே ஓடினார். இதைக்கண்ட நாதனும் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து அவர் பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் இது குறித்து பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீட்டில் இருந்த சிலிண்டர் டமார் என்று பெரிய சத்தத்துடன் 2-ஆக வெடித்து சிதறியது. அந்த நேரத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முழுவதும் நாசம் அடைந்தது. இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைபோல் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மிட்டக் கண்டிகை இருளர் காலனியில் வசிப்பவர் ராஜகோபால் மனைவி மல்லிகா. கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக குடிசையின் மேற்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டிலிருந்து உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நீரூற்றி குடிசை வீட்டில் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com