

வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விநியோகத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியப் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால், மிகவும் தொழில்மயமான தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி, இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய, இதுதொடர்பான துறையினருக்கு உத்தரவிட வேண்டும். வளைகுடா நாடுகளில் 19 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவி எண்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதுவரை உதவி கோரி 2,600 அழைப்புகள் வந்துள்ளன. பெரும்பாலானோர் தாயகம் திரும்புவதற்கான விமான ஏற்பாடுகளைக் கோரியுள்ளனர். அதில் ஆயிரம் பேரின் தகவல்களைச் சேகரித்து ஏற்கனவே வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பகிர்ந்துள்ளோம்.
பலர் அருகில் உள்ள வேறு நாடுகளில் இருந்து இந்தியா வர வேண்டியுள்ளதால் அவர்களுக்கான விசா உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 593 மீனவர்களும் இரான் நாட்டில் சிக்கியுள்ளனர். மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.