சிலிண்டர் தட்டுப்பாடு: பல்வேறு தரப்பினருடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

சிலிண்டர்கள் வினியோகத்தை கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
சிலிண்டர் தட்டுப்பாடு: பல்வேறு தரப்பினருடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை
Published on

சென்னை,

அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையை மூடுவதாகவும், மீறி கப்பலை இயக்கினால் சுட்டு வீழ்த்துவோம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக சர்வதேச அளவில் சமையல் கியாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.

இதனையடுத்து இந்தியாவை பொறுத்தவரை வீட்டு உபயோக மற்றும் வணிக கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தற்போது முன்பதிவு காலத்தை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் மற்றும் ஆஸ்பத்திரி போன்ற அவசர தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் வினியோகத்தை கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலியால் தமிழகத்தில் வணிக கியாஸ் சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 12 லட்சம் ஓட்டல்கள், டீக்கடைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மாநிலத்தின் பல இடங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டுவரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஓட்டல் சங்க நிர்வாகிகள், எச்.பி, பாரத், இண்டேன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவன பிரநிதிகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவன பிரநிதிதிகள் கலந்து கொண்டுள்ளனர். சிலிண்டருக்கு பதிலாக மாற்றாக வேறு வழியை கையாள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com