

சென்னை,
நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு இன்று அறிவித்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
51-வது தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதன்படி தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது!. நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது டுவிட்டரில், உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தனது டுவிட்டரில், இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெற்ற இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.