½ மணி நேரம் தாமதமாக புறப்பட்ட தாதர் எக்ஸ்பிரஸ்

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கார்டை மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் தாதர் எக்ஸ்பிரஸ் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. ரெயில்வே கேட் கீப்பரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
½ மணி நேரம் தாமதமாக புறப்பட்ட தாதர் எக்ஸ்பிரஸ்
Published on

விழுப்புரம்

தாதர் எக்ஸ்பிரஸ்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக தாதருக்கு செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் இரவு 10.10 மணிக்கு ரெயில் புறப்படுவதற்காக சிக்னல் போடப்பட்டது. அப்போது ரெயில் நிலையம் அருகில் உள்ள முத்தோப்பு ரெயில்வே கேட்டில் இருக்கும் சிக்னலும் இயங்கியதால் ரெயில் செல்ல வசதியாக கேட் மூடப்பட்டது.

ஆனால் இந்த ரெயில் உள்ள கார்டு பெட்டியில் கார்டை மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் தாதர் எக்ஸ்பிரஸ், விழுப்புரம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ரெயில் புறப்பட தாமதமாகும் என்ற நிலையில் முத்தோப்பு ரெயில்வே கேட்டையும் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

கேட் கீப்பரிடம் தகராறு

மூடப்பட்டு அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மீண்டும் கேட் திறக்கப்படாததால் அங்கிருந்த வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதில் ஆத்திரமடைந்தவாகன ஓட்டிகள் 2 பேர், அங்கிருந்த கேட் கீப்பர் ராஜஸ்தான் மாநிலம் பாவுட்டா பகுதியை சேர்ந்த ராம்லால்மீனா மகன் சஞ்சய்குமார் மீனா(வயது 33) என்பவரிடம் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். மேலும் சஞ்சய்குமார் மீனாவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதோடு அவரை தகாத வார்த்தையால் திட்டி அரசு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதைப்பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

2 பேர் கைது

இதனிடையே தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில், இரவு 10.50 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு முத்தோப்பு கேட்டை கடந்து சென்றது. அதன் பிறகு அங்குள்ள சிக்னல் ஆப் செய்யப்பட்டதும் அந்த கேட் திறக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து ரெயில்வே கேட் கீப்பர் சஞ்சய்குமார் மீனா, விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சஞ்சய்குமார் மீனாவிடம் தகராறு செய்த விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்த பாபு மகன் பாலாஜி(27), கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ்(29) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

தமிழ்நாட்டில் தங்கி பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும், அவர்களை பற்றி பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வரும் சூழலில் தற்போது வடமாநிலத்தை சேர்ந்த ரெயில்வே கேட் கீப்பரிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com