

சேலம்,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வீட்டை காலி செய்வதற்கு, உணவில் மலம் கலந்து வீசி, நில உரிமையாளர் துன்புறுத்துவதாக பெண் அளித்த புகாரின்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
சங்ககிரியை அடுத்த பொடாரன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது விவசாய நிலத்தின் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தார்ச்சாலை ஓரத்தில் வயதான தம்பதியரை குடியமர்த்தி உள்ளார். அந்த தம்பதியின் பேத்தி ராதிகா, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீட்டைக் காலி செய்யுமாறு ராஜா மிரட்டுவதாக கூறியுள்ளார். ராஜா தகாத வார்த்தைகளால் திட்டி, உணவில் மலம் கலந்து வீசியதாகவும் அவர் கூறியிருந்தார். அதன்பேரில், சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடை நம்பி உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலத்தை அளவீடு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது புகார் அளித்தவர்கள் யாரும் அங்கு இல்லாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதற்கிடையே, சிலரின் தூண்டுதலின் பேரில் ராதிகா பொய்யான புகார் அளித்து வருவதாக, எதிர்த் தரப்பினர் கூறியுள்ளனர்.