'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டி
Published on

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் 

பழனி புதுதாராபுரம் சாலையில் ஜவகர்நகர் பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை விரைவாக சரிசெய்ய வேண்டும்.

-வேலு, பழனி.

சேதமடைந்து வரும் நூலக கட்டிடம்

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பங்களாதெருவில் செயல்பட்டு வரும் நூலக கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்து வருகிறது. மழைக்காலங்களில் கட்டிடத்துக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண்குமார், நெய்க்காரப்பட்டி.

குண்டும், குழியுமான சாலை 

திண்டுக்கல் சாலை ரோட்டில் தனியார் வங்கி அருகில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. தற்போது திண்டுக்கல்லில் மழை பெய்வதால் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது தெரியாமல் இரு சக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-சிவசக்தி, ஒய்.எம்.ஆர்.பட்டி.

குவிந்து கிடக்கும் குப்பைகள் 

நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், சாக்கடை கால்வாயையும் தூர்வார வேண்டும்.

-பொதுமக்கள், நிலக்கோட்டை.

வங்கி சேவை கிடைக்குமா?

செந்துறையை அடுத்த கோசுக்குறிச்சி ஊராட்சி பகுதியில் வங்கிகள், ஏ.டி.எம். எந்திரங்கள் என எந்த வசதியும் இல்லை. இதனால் வங்கி பண பரிவர்த்தனைகளுக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நத்தம் அல்லது செந்துறைக்கு வங்கி சேவைக்காக செல்ல வேண்டி உள்ளது. எனவே கோசுக்குறிச்சியில் வங்கி சேவையை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் ரசீது, கோசுக்குறிச்சி.

பயன்பாடு இல்லாத கழிப்பறை 

கம்பத்தை அடுத்த சுருளிதீர்த்தம் பகுதியில் அமைக்கப்பட்ட பெண்களுக்கான கழிப்பறை சேதமடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. மேலும் கழிப்பறையை சுற்றிலும் குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பறை பயன்பாட்டில் இல்லாததால் அதனை பயன்படுத்த முடியாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-ரவி, அப்பிப்பட்டி.

அதிக சத்தத்தால் பயணிகள் அவதி

கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால் அதில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத், கம்பம்.

திறப்பு விழா காணாத பூங்கா

கம்பம் நந்தகோபால்சாமி நகரில் நகராட்சி சார்பில் பூங்கா கட்டப்பட்டது. ஆனால் இன்னும் திறப்பு விழா காணவில்லை. பூங்கா தற்போது வரை காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும், சிறுவர்களும் அவதிப்படுகின்றனர். எனவே பூங்காவை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-அமுதா, கம்பம்.

புதர்மண்டி கிடக்கும் மயானம்

கடமலைக்குண்டுவில் உள்ள மயானத்தில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை புதைக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மயானத்தில் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

ஊர்மக்கள், கடமலைக்குண்டு.

-----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

----------------

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com