திருவெண்ணெய்நல்லூர்: கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றம்


தினத்தந்தி 3 May 2025 12:32 PM IST (Updated: 3 May 2025 12:37 PM IST)
t-max-icont-min-icon

பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூர்,

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சி மற்றும் அமைப்பின் கொடிக்கம்பங்களை 12 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்கள் பொது இடங்களில் உள்ள கட்சி மற்றும் அமைப்பின் கொடிக்கம்பங்களை அகற்றி வருகிறார்கள்.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியிலும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள். ஆனால் இதில் ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்கட்சியின் கொடிக்கம்பங்களை அகற்றாமல் இதர கட்சி மற்றும் அமைப்பின் கொடிகம்பங்களை அகற்றி வருவதாகவும் புகார் தொிவித்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பாரபட்சமின்றி அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றிய செய்தி படத்துடன் தினத்தந்தியில் நேற்று வெளியானது. இந்த விவகாரம் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கும் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ஷேக்லத்தீப் மேற்பார்வையில் துப்புரவு மேற்பார்வையாளர் தனஞ்ஜெயன் மற்றும் பணியாளர்கள் திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் அகற்றப்படாமல் இருந்த இரு கட்சி கொடிக்கம்பங்களை அகற்றினர். பேரூராட்சியில் பொது இடங்களில் உள்ள கட்சி மற்றும் அமைப்பின் கொடிக்கம்பங்கள் ஓரிரு நாட்களில் அகற்றப்படும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.

1 More update

Next Story