

கோவை,
பசிபிக் பெருங்கடலில் இயல்பை விட வெப்பநிலை மாற்றம் அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைந்து வருகிறது. ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை வெப்பநிலை நீடிக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெறும் மாவட்டம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும்போது, பில்லூர், சிறுவாணி, ஆழியாறு, சோலையாறு, திரு மூர்த்தி, அமராவதி அணைகளுக்கு தண்ணீர் வரும். அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை காலத்திலும் மழை பெய்யும். இரு பருவங்களிலும் மழை பெய்யும் மாவட்டமாக விளங்கிய கோவையில், எல்நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பெய்வது குறைந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வழக்கமாக கோவை மாவட்ட பகுதிகளில் ஜூலை மாதம் மழை பெய்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த நிலை மாறி வெயில் வாட்டுவதுடன், மழை குறைந்து வருகிறது.
இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. சோலையார் அணையின் நீர்மட்டம் மள, மளவென குறைந்து 78.92 அடியாக உள்ளது. ஆழியாறு-55.60 அடி, பரம்பிக்குளம்-21 அடி, திருமூர்த்தி அணை-33.94 அடி, சிறுவாணி அணை-21 அடி, பில்லூர் அணை-85 அடி என்று குறைந்துள்ளது.
எனவே இதே நிலை நீடித்தால் கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படும். விவசாயத்துக்கும் போதிய அளவு நீர் கிடைக்காத நிலை ஏற்படும். அதனால் பொதுமக்கள், விவசாயிகள் நீர் சிக்கன முறையை கடை பிடிக்க வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.