‘கஜா’ புயலில் வாழை மரங்கள் சேதம்: ரெயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

‘கஜா’ புயலில் வாழை மரங்கள் சேதம்: ரெயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

திருச்சியில் ‘கஜா’ புயலால் வாழைகள் சேதமடைந்த வேதனையில், ரெயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
Published on

திருச்சி,

திருச்சி திருவானைக்காவல், மேலகொண்டையம்பேட்டை, வடக்கு தெருவை சேர்ந்த நடராஜனின் மகன் செல்வராஜ் (வயது 29). விவசாயியான இவர் அந்த பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டிருந்தார். மேலும் இவர் தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் வேலையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கஜா புயல் தாக்குதலில், அவரது தோட்டத்தில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. தோட்டத்திற்கு சென்ற செல்வராஜ், வாழை மரங்கள் சரிந்து கிடந்ததை பார்த்து மனவேதனை அடைந்தார். அவர் கடன் வாங்கி வாழை பயிரிட்டிருந்தார்.

வாழை மரங்கள் அவ்வளவும் சேதமடைந்ததால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாது என்று எண்ணி புலம்பியுள்ளார். மேலும் தனது மனைவி மற்றும் நண்பர்களிடமும் வாழை மரங்கள் சேதமடைந்தது குறித்து புலம்பினார். சேதமடைந்த வாழை மரங்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வந்திருந்தார். அதை அவ்வப்போது பார்த்து கவலை அடைந்தார்.

வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற செல்வராஜ் தனது நண்பர்களுக்கு மீண்டும் போன் செய்து புலம்பினார். இந்த நிலையில் மாம்பழச்சாலை அருகே காவிரி பாலம் பக்கம் ரெயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நேற்று அதிகாலை 3 மணிக்கு தகவல் அறிந்ததும் திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் நேற்று மதியம் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாழை மரங்கள் சேதமடைந்ததில் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த செல்வராஜுக்கு சரண்யா என்ற மனைவியும், 2 வயதில் மகளும் உள்ளனர். செல்வராஜ் தற்கொலை தொடர்பாக திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com