உயர் அழுத்த மின்சாரத்தால் வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம்: மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி அருகே உயர் அழுத்த மின்சார வினியோகத்தால் வீடுகளில் மின்சாதனங்கள் சேதம் அடைவதாக கூறி கிராம மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் அழுத்த மின்சாரத்தால் வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம்: மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சிக்கு உட்பட்டது தண்டலம் கிராமம். இந்த கிராமத்தில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அடிக்கடி உயர் அழுத்த மின்சாரம் வீடுகளுக்கு சப்ளை ஆகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவ்வாறு வினியோகம் ஆனதால் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மின்சாதன வீட்டு உபயோகப்பொருட்கள் தீப்பிடித்து சேதம் அடைந்தன. அதே போல கடந்த 15-ந் தேதியும், அங்குள்ள வீடுகளுக்கு உயர் மின் அழுத்தம் வினியோகம் ஆனதால் பல லட்சம் மதிப்புள்ள மின் சாதன பொருட்கள் மீண்டும் சேதம் அடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கிராம மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரோடு இணைந்து கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க மாவட்ட பொருளாளர் முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜெ.அருள் உள்பட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மின் துறை உதவி செயற்பொறியாளர் முரளி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் தங்களது 2 மணி நேர முற்றுகை ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com