சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்
Published on

'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை மேம்பாலத்தின் கீழே கூழாங்கற்கள் மூலம் நடைபாதை அமைக்கப்பட்டு வரும் பணியை சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அவர், நுங்கம்பாக்கம் பள்ளி சாலை, கில் நகர் ஆகிய இடங்களிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

பின்னர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

மாநகராட்சிக்கு வரும் அனைத்து புகார்களையும் சரி சமமாக கருதி ஆய்வு நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை அமைய வேண்டும். புகார்களை தீர்வு காண்பதில் நடைமுறை சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அதுபற்றி உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.

மாநகராட்சி கவுன்சிலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். கடைவீதி, ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், அலுவலக வளாகங்கள் அமைந்துள்ள இடங்களில் உடைந்த நடைபாதையை சீரமைத்து வர்ணம் பூசப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சேதமான நிலையில் உள்ள சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். கழிவுநீர், வடிகால் பணிகள் முடிந்த பின்னர் அந்த சாலை நல்ல முறையில் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மாநகராட்சி கட்டிடங்கள், வளாகத்தின் சுவர்களில் வர்ணம் பூசும் பணியை தொடங்கி படிப்படியாக நிறைவு செய்ய வேண்டும். 'சிங்கார சென்னை' யை மக்கள் கண்கூடாக உணரும் வகையில் திட்டப்பணிகள் அமைய வேண்டும். சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றுதல், மற்ற வேலைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com