

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகத்தில் ஆபத்தான நடைப்பாலத்தை இடித்து அகற்றி விட்டு அகலமான பாலம் கட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடைபாலம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, விழல்கோட்டகம் கிராமத்தில், விழல்கோட்டகத்திற்கும், மணல்கொண்டான் கிராமத்திற்கும் இடையே, கோரையாற்றின் குறுக்கே சுமார்40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் அமைக்கப்பட்டது.
இந்த நடைபாலத்தின் வழியாக விழல்கோட்டகம், வெள்ளக்குடி, மணல்கொண்டான், பொதக்குடி, வாழச்சேரி, சித்தாம்பூர், கற்கோவில், கோரையாறு, அதங்குடி, கிளியனூர், மரக்கடை, லெட்சுமாங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சென்று வந்தனர். மேலும் இந்த பாலத்தில் இரு சக்கர வாகனங்களும் சென்று வந்தன.
பழுதடைந்த தடுப்பு கம்பிகள்
இந்த நிலையில், இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. முகப்பில் உள்ள பாலத்தை தாங்கி நிற்கும் சுவர் மற்றும் பாலத்தின் இரு பக்கமும் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் பழுதடைந்து காணப்படுகின்றன. நடைபாதையின் இருபுறமும் பழுதடைந்துள்ளது. இதனால், இந்த பாலத்தை கடந்து செல்ல அந்த பகுதி மக்கள் அச்சம் அடைகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் போது, தவறி விழுந்து விடுவோமா என்று பாலத்தில் சென்று வருபவர்கள் பதற்றம் அடைகின்றனர்.
அகலமான பாலம் கட்ட வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த நடைபாலத்தை அகற்றி விட்டு அகலமான பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.