உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது அவசியம்

உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது அவசியம்
உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது அவசியம்
Published on

25 சதவீதம் கூடுதல் மகசூல் பெற உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது அவசியம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டி.ஏ.பி. கரைசல்

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற 2 சதவீத டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும். 1 ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாளே ஊறவைத்து நன்கு கலக்கி விட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு 1 ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும்.

தரமான மணிகளாக

35-வது நாள் பூக்கும் தருணத்தில் 1 முறையும், 45-வது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் 1 முறையும் கரைசல் தயாரித்து 2 முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணிலிருந்து நேரடியாக மணிச்சத்தை எடுத்துக்கொள்ளமுடியாத பயிர்கள் டி.ஏ.பி. கரைசல் மூலமாக இலை வழியாக மணிசத்து அளிக்கும் போது பயிர்கள் உடனடியாக மணிச்சத்தை பெறுவதுடன் உருவாகும் பூக்களை எல்லாம் பிஞ்சுகளாக மாறி காய்களாக உருவாகி அதில் உள்ள விதைகள் எல்லாம் நல்ல திரட்சியான எடையுடன் கூடிய தரமான மணிகளாக கிடைக்கிறது.

கூடுதல் மகசூல்

இதனால் வழக்கத்திற்கு மாறாக 1 ஏக்கரில் 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டி.ஏ.பி. கரைசல் தெளித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com