

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த கொள்ளையால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்தனர்.
விழுப்புரம் அடுத்த பிடாகம் பகுதியில் பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. நேற்று இரவு வியாபாரிகள் தங்களது கடைகளைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றனர். இன்று காலை வழக்கம் போல் கடைகளைத் திறக்க வந்தபோது, அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மர்ம நபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25,000 ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும், கடையிலிருந்த விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் இதர பொருட்களையும் அள்ளிச் சென்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு கடைகளில் இந்த துணிகர கொள்ளை அரங்கேறியது.
இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
நெருக்கடி மிகுந்த பகுதியில் ஒரே நள்ளிரவில் 4 கடைகளில் கொள்ளை போயிருப்பது அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.