

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றதாகும். விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொட ங்கி நடந்து வருகிறது.
தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மதியம், இரவில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தசரா திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா விழாவினை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு வசதியாக வருகிற 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 3 தினங்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்களை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் தசரா தொடர் விடுமுறையை முன்னிட்டு நெல்லை. தென்காசி, சங்கரன்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி போன்ற இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 300 சிறப்பு பஸ்கள் நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லும் பயணிகள் இந்த பஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.