தசரா திருவிழா குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
தசரா திருவிழா குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
Published on

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

தசரா திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வரும் பக்தர்கள் காப்பு கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்து வருகின்றனர்.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) இரவில் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. காலை 10.15 மணிக்கு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கோவிலின் முன்பாக எழுந்தருளுகிறார். அங்கு மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சிங்க தலையுடனும், எருமை தலையுடனும் அடுத்தடுத்து உருமாறி போர்புரிய வரும் மகிஷாசூரனை அம்மன் வேல் கொண்டு வதம் செய்கிறார்.

11-ம் திருநாளான நாளை மறுநாள் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் அம்மன் கோவிலைச் சுற்றி பவனி வருகிறார். மாலையில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படுகிறது.

தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்களும் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களிலேயே காப்பு அவிழ்த்து விரதத்தை முடிக்கின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை. வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) மதியம் பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com