தசரா விடுமுறை: சுற்றுலா பயணிகளுக்கு கொடைக்கானலில் புதிய வசதி

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் பாயிண்ட் ஆகிய சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சாலைகளில், டிக்கெட் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
கொடைக்கானல்
Published on: 

திண்டுக்கல்:

தசரா விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், முக்கிய சுற்றுலா தலங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதியை தமிழ்நாடு வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, சுற்றுலா பயணிகள் https://kodaikanalwildlifesanctuary.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்கூட்டியே நுழைவுக் கட்டணத்தை செலுத்தலாம். பின்னர், டிஜிட்டல் ரசீது அல்லது அச்சிடப்பட்ட ரசீதை காண்பித்து சுற்றுலா தலங்களுக்குச் செல்லலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல மலைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு, விடுமுறை நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் சிக்கல்

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு, மோயர் பாயிண்ட் ஆகிய சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சாலைகளில், டிக்கெட் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.முன்னதாக, ஒவ்வொரு சுற்றுலா தலத்திலும் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், ஒருங்கிணைந்த முறையில் நேரடியாக டிக்கெட் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து, சம்பவ இடத்திலேயே கியூஆர் குறியீடு மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், மலைப்பகுதிகளில் செல்போன் சிக்னல் சீராகக் கிடைக்காததால், சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கியூஆர் குறியீடு மூலம் கட்டணம் செலுத்தும் வசதிகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

முன்கூட்டியே டிக்கெட் பெற அறிவுறுத்தல்

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோர் இணைந்து ஆலோசனை நடத்தி, முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் பெறும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு வாயில்களில் தாமதத்தைத் தவிர்க்கவும், சுற்றுலா தலங்களுக்குச் சிரமமின்றிச் செல்லவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com