தஷ்வந்திற்கு அதிகபட்சமாக இரட்டை ஆயுள் வழங்கப்பட வாய்ப்பு? மாலை 3 மணிக்கு தீர்ப்பு

தஷ்வந்திற்கு அதிகபட்சமாக இரட்டை ஆயுள் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கொல்லப்பட்ட சிறுமி தரப்பின் வழக்கறிஞர் கூறியுள்ளார். #HasiniMurderCase #JusticeForHasini
தஷ்வந்திற்கு அதிகபட்சமாக இரட்டை ஆயுள் வழங்கப்பட வாய்ப்பு? மாலை 3 மணிக்கு தீர்ப்பு
Published on

செங்கல்பட்டு,

சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமானாள்.

இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தியதில் அதே குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (24) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் உடலை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.

இதையடுத்து குன்றத்தூர், சம்பந்தம் நகர், ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் தஷ்வந்த் தனது தந்தை சேகர், தாயார் சரளா ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 2-ந் தேதி செலவுக்கு பணம் கொடுக்காததால் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை செய்த தஷ்வந்த் அவர் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 5-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதற்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து செல்லப்பட்டார். கடந்த டிசம்பர் 13-ந் தேதி கோர்ட்டுக்கு வந்த தஷ்வந்தை மகளிர் அமைப்பினர் தாக்கிய சம்பவமும் நடந்தது.

விசாரணை தொடங்கியதில் இருந்து இதுவரை 34 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது. பின்னர் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் 42 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இருதரப்பு இறுதி வாதங்களும் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் எழுத்துபூர்வமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார் வந்திருந்தனர்.

வழக்கு குறித்த அனைத்து விவரங்களும் உறுதி செய்யப்பட்ட நிலையில் 19-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இன்று செங்கல் பட்டு கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. குற்றவாளி தஷ்வந்த், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து கோர்ட் கதவுகள் மூடப்பட்டன. நீதிமன்றத்திற்குள் போலீஸ் தரப்பு வழக்கறிஞர்கள்,அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சிறுமியின் தந்தை கூறினார்.

தஷ்வந்திற்கு அதிகபட்சமாக இரட்டை ஆயுள் வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கொல்லப்பட்ட சிறுமி தரப்பின் வழக்கறிஞர் கூறியுள்ளார். சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை கிடைக்குமா என்பதை சரியாக கூற இயலாது. தஷ்வந்த் 25 வயதிற்குட்பட்டவராக உள்ளதால் தூக்கு தண்டனைக்கு சில சட்ட சிக்கல்கள் இருக்கலாம் என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு அதிகபட்சம் மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஹாசினி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com