நகைக்காக பெற்ற தாயைக் கொன்று கொள்ளை நாடகம்: மகள் கைது

போலீசாரின் விசாரணையில் மகள் சரண்யா முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
நகைக்காக பெற்ற தாயைக் கொன்று கொள்ளை நாடகம்: மகள் கைது
கீதா- சரண்யா
Published on: 

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே 54 வயது பெண் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நகைக்காக பெற்ற தாயைக் கொன்றுவிட்டு கொள்ளை நாடகமாடிய அவருடைய மகளே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளுடன் வசித்த தாய்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் வி.ஐ.பி. சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 54). இவர் அங்குள்ள ஒரு தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இதனால் கீதா தனது மூத்த மகள் சரண்யா (தனியார் பள்ளி ஆசிரியர்) மற்றும் பேரனுடன் வசித்து வந்துள்ளார்.

பகலில் நடந்த கொடூரம்

இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி அன்று சொந்த வேலை காரணமாக கீதா பணிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது பேரன், வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கீதா அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.10,000 ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

போலீசார் தீவிர விசாரணை

இந்த சம்பவம் குறித்து மகள் சரண்யா அளித்த புகாரின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் வந்து சென்றதற்கான தடயங்கள் இல்லை என்பது தெரியவந்தது.

அதிர்ச்சித் திருப்பமும் கைதும்

இதனால் சந்தேகமடைந்த போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது மகள் சரண்யா முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நகைக்காக தாயுடன் ஏற்பட்ட தகராறில் தானே தாயைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகவும், பின்னர் மர்ம நபர்கள் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து சென்றது போல் நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சரண்யாவைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து நகைகளை மீட்கும் பணியிலும், இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக பெற்ற தாயையே, மகள் கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X