

குமரி,
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை ஆலடிகாலனியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 47), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி 2-வது மகளுடன் சுரேஷ்குமாரை விட்டு பிரிந்து சென்றார். மூத்த மகள் ஆர்த்தி (21) சுரேஷ் குமாருடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி தனது தந்தை மதுக்குடித்ததில் இறந்து விட்டதாக ஆர்த்தி பூதப்பாண்டி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனை முடிவில் சுரேஷ்குமாரின் தலையில் காயம் இருப்பதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். அத்துடன் மகள் ஆர்த்தி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், தனது தந்தை சுரேஷ் குமார் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் பேசியதால் அவரை கீழே தள்ளிவிட்டு கம்பால் அடித்து கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆனால் ஒரு பெண் மட்டும் தனியாக இந்த கொலையை செய்து விட முடியாது என போலீசார் கருதினர். எனவே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா, ஆர்த்தியிடம் விசாரணை நடத்தினார். அத்துடன் தனிப்படை போலீசார், ஆர்த்தியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஆர்த்திக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருந்தது தெரியவந்தது. அத்துடன் ஒரு செல்போன் நம்பரில் இருந்து பல முறை அழைப்புகள் வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் தெரிசனங்கோப்பு வாட்ஸ்புரத்தை சேர்ந்த சுரேஷ் பாபு (47) என்பவர் ஆர்த்தியிடம் அடிக்கடி பேசியதும், இருவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது.
இவர் ஆர்த்தியின் தந்தை சுரேஷ் குமாரின் நண்பர் ஆவார். சுரேஷ்குமாரின் வீட்டுக்கு வந்து ஒன்றாக அமர்ந்து சுரேஷ்பாபு மது குடிப்பது வழக்கம். சுரேஷ்குமார் மது போதையில் தூங்கியதும், ஆர்த்தியும் சுரேஷ்பாபுவும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதுபோல் சம்பவத்தன்று இரவும் சுரேஷ்குமாரின் வீட்டில் அமர்ந்து இருவரும் மது குடித்துள்ளனர். சுரேஷ்குமார் மது போதையில் மயங்கி தூங்கியவுடன் வழக்கம் போல் இருவரும் உல்லாசத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென சுரேஷ்குமார் கண்விழித்து பார்த்தார். அவர் சுரேஷ் பாபுவின் செயலை பார்த்து தகாத வார்த்தைகள் பேசி அவரை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் பாபு அவரை கீழே தள்ளினார். இதில் அவரது தலையில் அடிப்பட்டது. பின்னர் அவரது வயிற்றில் மிதித்து கழுத்தை நெரித்துக் கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காதலன் சுரேஷ்பாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட சுரேஷ்பாபு தெரிசனங்கோப்பு வாட்ஸ்புரத்தில் வெல்டிங்பட்டறை நடத்தி வருகிறார். இவர் முதலாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் முதல் மனைவி பிரிந்து சென்றார். அதன்பின்பு 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவர் திருமணமான சில மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சுரேஷ்பாபு 3-வது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் 3-வது மனைவியும் பிரிந்து சென்றார்.
அதன்பின்பு சுரேஷ் பாபு ஆர்த்தியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். சுரேஷ்குமாரை கொலை செய்த பின்னர், ஆர்த்தியிடம் இந்த கொலையை நீ ஒப்புக்கொண்டால் உன்னை நான் ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விடுவேன். அதன்பின்பு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். ஆர்த்தியும் தனது தந்தை இறந்து விட்டதால் அனாதையான தனக்கு ஆதரவு வேண்டும் என்பதால் சுரேஷ் பாபு கூறியபடி கொலையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.