

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால்,உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அந்த துறையின் புதிய டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழக தலைமைச் செயலாளரை மாற்றியும், பாஜக, ஆர்எஸ்எஸ். ஆதரவாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை (DVAC) தலைமை இயக்குநராகவும் நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு திமுக எம்.பி.யும், நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டிஜிபியாக செயல்படுவார் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.