மலைப்பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கும் 'விடியல் பயணம்'

மலை கிராம பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், உடன் வருபவர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்பதை திமுக அறிவித்தது. எனவே, பதவியேற்ற முதல் நாளே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போதே பெண்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்வதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து 2021ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு பேருந்துகளிலும், கிராமப்புற அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை சுமார் 482.34 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டதாகவும், பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி படிக்கும் மாணவியர் ஆகியோர் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1,600 கோடி வரை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
இந்நிலையில், மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகள், அவருடன் வரும் ஒரு துணையாளர் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.






