அ.தி.மு.க.வை மீட்கும் நாள் தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி - சசிகலா சபதம்

தன்னை சந்திக்கும் ஆதரவாளர்களிடம் அ.தி.மு.க பொதுச்செயலாளர் நான் தான் என கூறி அவர்களை சசிகலா உற்சாகப்படுத்தி வருகிறார்.
அ.தி.மு.க.வை மீட்கும் நாள் தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி - சசிகலா சபதம்
Published on

தஞ்சாவூர்:

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். கடந்த மாதம் 26-ந்தேதி தஞ்சைக்கு வந்த சசிகலா 27-ந்தேதி நடைபெற்ற டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். பின்னர் 29-ந்தேதி பசும்பொன் சென்று தேவர் சமாதியில் மரியாதை செலுத்தி விட்டு மீண்டும் தஞ்சைக்கு வந்தார். இதையடுத்து கடந்த 1, 2-ந்தேதிகளில் தஞ்சாவூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே ஆதரவாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் நான் தான் என தன்னை சந்திக்கும் ஆதரவாளர்களிடம் கூறி அவர்களை சசிகலா உற்சாகப்படுத்தினார். மேலும் விரைவில் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணத்தை தொடர இருக்கிறேன். அ.தி.மு.கவை மீட்பதே லட்சியம். அன்றைக்குத் தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி என சசிகலா கூறியதாக அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குடும்பம் குடும்பமாக ஆண்கள், பெண்கள் என ஒரு கூட்டம் சசிகலாவை சந்திக்க வருவதால், அவருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. இன்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார். முதலில் 3 நாட்கள் மட்டுமே ஆதரவாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒரு நாள், அதாவது நாளை 6-ந்தேதியும் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வருகிற 7-ந்தேதி சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். அதன் பின்னர் அவரது சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று எந்த விதமான டென்ஷனும் இல்லாமல் தனது முக்கிய உறவினர்களுடன் பட்டாசு வெடித்து சசிகலா தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

முன்னதாக தனது அண்ணனும், டாக்டர் வெங்கடேஷின் அப்பாவுமான சுந்தரவதனம் மறைவையொட்டி தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் நேற்று தீபாவளி படையல் போடப்பட்டது. அதில் கலந்து கொண்டவர், பின்னர் தனது அண்ணன் மகன் மறைந்த மகாதேவன் வீட்டிற்குச் சென்றார். மகாதேவன் உயிரிழந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவர் வீட்டுக்குள் சென்ற சசிகலா சில நிமிடங்கள் யாரிடமும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளார்.

இதையடுத்து நடராசனின் தம்பி ராமச்சந்திரன் மகன் டாக்டர் ராஜுவின் குழந்தை மற்றும் நடராசன் சகோதரர்களின் பேரப் பிள்ளைகளுடன் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டில் தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்.

சுமார் 30 வருடங்களுக்கு பிறகு தீபாவளி நாளில் சசிகலா தஞ்சாவூரில் இருப்பதுடன் உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியது அவரது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com